A reader's comment about Kudankulam.... Atomic Power plant- project, Tamil Nadu, India.
Bhackiaraj Ramakrishnan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2011-09-Dinamalar
அமெரிக்கா முதல் கூடங்குளம் வரை 2009ல் அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்வதென்ற முடிவுக்கு மன்மோகன் தலைமையிலான காங்கிரஸ் அரசு வந்தது. அதை இடதுசாரிகளில் ஆரம்பித்து பாஜகவரை அனைவரும் எதிர்த்தனர். அரசியல் அரங்கில் பல சூடான விவாதங்கள் நடத்தப்பட்டன. அந்த ஒப்பந்தம் இரு முக்கியக் காரணங்களுக்காக எதிர்க்கப்பட்டது. ஒன்று, அது நம்மை அமெரிக்காவிற்கு அடிமையாக ஆக்கும். இரண்டாவது அணுசக்திக் கதிர்வீச்சினால் உண்டாகும் பேரழிவு. ஆனால் மன்மோகன்சிங் எது பற்றியும் கவலையின்றி, பெருவாரியான மக்களின், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அதற்கு காங்கிரஸ் தரப்பில் சொன்ன காரணம், இந்தியாவின் மின்பற்றாக்குறையைச் சமாளிக்க, இந்தியா ஒளிர அணுசக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பது அவசியம் என்பதே. ஆனால் உண்மை என்ன? தற்போது இந்தியாவில் நிலக்கரி மூலம் பெறப்படும் அனல் மின்சாரம் 66 சதவிகிதம். நீர்நிலைகள் மூலம் பெறும் புனல் மின்சாரம் 26 சதவிகிதம். சூரிய சக்தி, காற்றாலை மூலம் பெறப்படும் மின்சாரம் 5 சதவிகிதம். அப்படியென்றால் அணு உலைகள்? அவை மூலம் நாம் பெறுவது வெறும் 3 சதவிகிதம் மட்டுமே! மற்ற எல்லா வழிமுறைகளையும்விட, மின் உற்பத்திக்கு அதிக செலவு பிடிக்கும் வழிமுறை அணு உலைகள் தான். அந்த ஒப்பந்தத்தின் மூலம் 50,000 கோடி ரூபாய் செலவளித்து 20 வருடங்களில் அணுசக்தி மூலமான மின் உற்பத்தி இரு மடங்காக்குவதே மத்திய அரசின் திட்டம். அதாவது வெறும் 6% க்காகவே இத்தனை செலவளிப்பு! பணத்தை விடவும் அதிகம் கவலை தரக்கூடிய விஷயம், அணு உலைகளில் இருந்து பெறப்படும் கழிவு. இதில் நம்மைப் பாதிக்கும் அள்விற்கு கதிர்வீச்சு இருக்கும். எனவே அதை கடலுக்கு அடியில் போடுவதே இப்போதிருக்கும் ஒரே வழிமுறை. அந்தக் கழிவு கடலில் கலந்தால், அது உருவாக்கும் சுற்றுச்சூழல் பாதிப்பினால் ஒரு உயிரினம்கூட அப்பகுதிக் கடலில் வாழ முடியாது. இப்படி மின் உற்பத்தியையும் பெரிதாக அதிகரிக்காத, மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் இந்த அணு உலைகளை இப்படிக் கஷ்டப்பட்டுக் கொண்டுவர வேண்டிய அவசியம் என்ன? இதற்கு இரண்டு காரணங்கள் தான் உண்டு. முதலாவது அமெரிக்காவின் அணுசக்தி-அடியாளாக இந்தியாவை ஆக்குவது. இவை உண்மையில் அணுகுண்டு தயாரிக்கும் வல்லமை பெற்ற இடங்கள் என்பதே உண்மை. இரண்டாவது காரணம், அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் பல ஆண்டுகளுக்கு முன்பே அணு உலைகள் கட்டுவதை நிறுத்திவிட்டதால்! ஆம், எந்த அமெரிக்கா நம்மை அணு உலை கட்டு, அது மின்சாரத்தைப் பெருக்கும் என்று நமக்கு அறிவுரை சொல்லி, ஒப்பந்தம் போட்டதோ, அதே அமெரிக்காவில் மக்களின் கடும் எதிர்ப்பின் காரணமாக அணு உலைகள் கட்டுவதே 35 ஆண்டுகள் முன்பே நிறுத்தப்பட்டுவிட்டது. ரஷ்யாவிலும் 22 ஆண்டுகளாக அணு உலைகள் கட்டப்படவேயில்லை. அப்படியென்றால், அணு உலை கட்டும் நிறுவனங்கள் கதி என்ன ஆவது? அதற்குத் தான் இந்தியா போன்ற ஏமாளி தேசமும், மண்ணுமோகன்சிங் போன்ற அடிமைகளும் இருக்கிறார்களே! அமெரிக்காவில் பல ஆண்டுகளுக்கு முன்பே மக்களுக்கு வந்துவிட்ட விழிப்புணர்வு, இப்போது தான் நமக்கு வந்துள்ளது. கூடங்குளத்தில் போராடும் மக்களும், அதற்கு ஆதரவளிக்கும் நாமும் முதலில் தெரிந்து கொள்ளவேண்டியது என்னவென்றால், இந்தப் போராட்டத்தின் முடிவு நம் முதல்வர் கையிலோ, பிரதமர் கையிலோ, ஜனாதிபதி கையிலோ இல்லை என்பதையே. எல்லாத்தரப்பினரின் கடும் எதிர்ப்பையும் மீறி அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டதின் பிண்ணனி சக்தியுடனே நாம் போராடிக்கொண்டிருக்கிறோம். இதில் இன்னொரு சங்கடமான விஷயம் என்னவென்றால், இந்த அணு உலை ரஷ்யாவின் உதவியுடன் கட்டப்பட்டது என்பது தான். இதில் என்ன கஷ்டம் என்றால், பொதுவாக மக்களுக்கு ஏதேனும் பிரச்சினை என்றால் வரிந்து கட்டிப் போராட வரும் கம்யூனிஸ்ட்களும், புரட்சிவாதிகளும் இப்போது அடக்கி வாசிப்பார்கள். முதலாளித்துவ அமெரிக்கா இதைக் கட்டியிருந்தால், இங்கே எப்போதோ புரட்சி(!) வெடித்திருக்கும். துரதிர்ஷ்டவசமாக பாட்டாளிகளின் ரஷ்யாவும் இதில் சம்பந்தப்பட்டுவிட்டதால், கூடங்குளம் மக்கள் இரு பெரும் சக்திகளோடு போராட வேண்டிய நிலை இப்போது. அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டபோது, மன்மோகன் சிங்கிடம் நேரடியாக ‘அமெரிக்க நலனுக்காக மக்களின் நலனைப் புறக்கணிக்கிறீர்கள்’ என்று எதிர்க்கட்சியினர் சொன்னபோதும், அவர் எதுவும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதித்தபடி உட்கார்ந்திருந்தார். அப்போது அணுசக்திக்கு எதிரான எதிர்ப்பு என்பது மேல்மட்டத்திலேயே இருந்தது. இப்போது தான் அது மக்கள் மட்டத்திற்கு வந்து சேர்ந்துள்ளது. அந்த மக்கள் கேட்பது ‘எங்கள் வளங்களை அழிக்காமல், எப்போதும் எங்களை ஆபத்தில் வாழ வைக்காமல், நிம்மதியாக இருக்க விடுங்கள், மின்சாரத்தை விடவும் உயிர் பெரிது’ என்பதையே. நாம் புரிந்துகொள்ள வேண்டிய யதார்த்தம் என்னவென்றால் இதற்கான தீர்வு உடனடியாகக் கிடைக்காது என்பதைத் தான். தொடர்ந்த பேச்சுவார்த்தை, போராட்டம், வழக்கு மூலமே இதற்கான தீர்வு எட்டப்பட முடியும். கேரளாவில் கொக்கோகோலாக் கம்பெனியை இழுத்துமூடவே 20 வருடங்களுக்கு மேலாக அந்த மக்கள் போராடவேண்டியிருந்தது. அப்படியென்றால், மாபெரும் வல்லரசுகளுக்கு எதிரான இந்தப் போராட்டம் வெற்றி பெற, நாம் இன்னும் அதிகமாகவே போராட வேண்டிவரலாம். அணுசக்தி ஒப்பந்தத்தையும் அணுசக்தியினையும் கடுமையாக எதிர்த்த ஜெயலலிதாவே, இப்போது ‘அதனால் பிரச்சினை ஒன்றும் இல்லை’ என்று சொல்கிறார் என்றால், இதில் உள்ள சிக்கலை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இதை முதலில் நாம் அனுமதித்திருக்கவே கூடாது. 15,000 கோடிக்கும் மேல் செலவளிக்கப்பட்டுள்ள நிலையில், அயல்நாட்டு உறவும் சம்பந்தப்பட்டுள்ள காரணத்தினால், நாளையே தீர்வு என்று ஏதும் இதற்கு கிட்டாது என்பதே கசப்பான உண்மை. இதை போராடும் நம் சொந்தங்களும் உணர்ந்துகொள்வது அவசியம். இது நீடித்து நடத்தப்பட வேண்டிய போராட்டம். அதற்கான சக்தியை நாம் திரட்டிக்கொள்தல் அவசியம். இப்போதைய நம் எதிர்ப்பார்ப்பாக மாநில அரசு பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்பதாக உள்ளது. அதுவும் முதல்வரே நேரடியாக பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என்று போராடும் மக்கள் விரும்புகின்றனர். அதற்கு நம் முதல்வர் இணங்க வேண்டும். 127 உயிர்களின் போராட்டமாக இது உருவெடுத்துள்ள நிலையில், அதை அவர் செய்வார் என்றே நம்புவோம். ஏறக்குறைய அனைத்துக் கட்சியினருமே இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். சீக்கிரமே நல்ல முடிவு எட்டப்படும் என்று நம்புவோம். வாய்மையே வெல்லும் - தாமதம் ஆனாலும்!